ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. இதில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். தேர்வின் போதே மதுரவாயல் மற்றும் வேலூரில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக அருகருகே அமர்ந்து தேர்வுகள் எழுதியதாகவும், கூகுள் பயன்படுத்தி தேர்வு எழுதியதாகவும் குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவின.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட இரு தேர்வு மையங்களிலும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் சோதனை நடத்தி, முறைகேடுகள் நடைபெறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று உதவி ஆய்வாளர் பணிக்கான அடுத்தக்கட்ட உடற்தகுதி தேர்வுக்காக 1:5 என்ற அடிப்படையில் 5,275 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதில் சர்ச்சைக்குள்ளான வேலூர் மையத்தில் இருந்து அடுத்தடுத்த எண்கள் கொண்ட 100 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதை மேற்கோள் காட்டி, முறைகேடு உறுதியாக நடைபெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உயரதிகாரிகளிடம் கேட்டபோது, குற்றச்சாட்டுகள் எழுந்த வேலூர் மாவட்டத்தில் 6,015 பேர் தேர்வு எழுதியதாகவும், அதில் 236 பேர் மட்டுமே அடுத்தக்கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எழுத்துத்தேர்வில் கூட நான்கு வகையான வினாத் தாள்களைப் பயன்படுத்தி தேர்வுகள் நடைபெற்றுள்ளதால் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், நேர்முகத் தேர்வுக்கு 1:2 என்ற அடிப்படையில் அழைக்கப்பட்டு, 969 பேர் உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.