குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தமாட்டோம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் உள்ளிட்ட ஏழு அமைப்புகள் சார்பில், கோட்டை முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுமையாக போராட்டங்கள் பரவுகின்றன. தீவிரமாகிவரும் பொருளாதார நெருக்கடி, அது ஏற்படுத்தப் போகும் விளைவுகள், எரிமலையாக வெடிக்கக் காத்திருக்கிறது.
இதற்கு எந்தத் தீர்வையும் தர முடியாத பாஜக அரசு, மக்களின் கோபத்தை திசைத் திருப்பி, தனது ராஷ்ட்ரிய கனவை அமல்படுத்தவும், காஷ்மீர், முத்தலாக், பாபர் மசூதி, பசுவதை தடுப்பு என்கிற வரிசைகளில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டுவந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன், மக்கள் தொகை பதிவேட்டிற்கான தகவல்களையும் மக்களிடமிருந்து பெற உள்ளார்கள். இதனை நாடு முழுமையாகச் செயல்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கி 2020-க்குள் முடிக்க உள்ளது. இந்தத் தகவல்கள் மூலம், சந்தேகப்படும் நபர்கள் என, அரசுக்கு எதிராகப் போராடுபவர்களையும், இஸ்லாமியர்களையும் தனியே பிரித்தெடுத்து அவர்களின் குடியுரிமையை நிரூபிக்கச் சொல்வார்கள்.
சந்தேகப்படும் நபர்கள் யார் என்பதையும், குடியுரிமை வழங்கலாமா என்பதையும் அலுவலர்கள்தான் தீர்மானிப்பார்கள். இத்தகைய அபாயகரமான தேசியக் குடியுரிமை பதிவேட்டிற்கான முன் தயாரிப்புதான் என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு.
அதிகரித்துவரும் மக்கள் திரள் போராட்டங்களின் காரணமாக சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்.ஐ அமல்படுத்தமாட்டோம் என மேற்கு வங்கம், கேரளம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்துள்ளன. அதேபோல், தமிழ்நாட்டிலும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்தமாட்டோம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பதுடன், சட்டப்பேரவையில் தீர்மானமாக இயற்ற வலியுறுத்தி, இன்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்துகிறோம்” என்றார்.
குடியுரிமைச் சட்டத்தை மறுத்து தீர்மானம் இயற்றுக - மக்கள் அதிகாரம் போராட்டத்தில் பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான பதாகைகளை ஏந்திக் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் கோவன், மத்திய அரசின் செயல்பாடுகளில் உள்ள ஆபத்துகள் குறித்து பாடலாகப் பாடினார்.
அப்போது அனைவரும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து அதனை கைதட்டி உற்சாகப்படுத்தினர். கூட்டத்தை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் பங்கேற்பு! இதையும் படிங்க: எந்த ஆதாரமுமின்றி கைதுசெய்வதா? ப. சிதம்பரம் ஆதங்கம்