தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாலியல் தொந்தரவு அளித்த சேத்துப்பட்டு பள்ளி ஆசிரியர்: வெளியான அதிர்ச்சித் தகவல்கள்! - SEXUAL CRIMES IN CHENNAI SCHOOLS

சிறப்பு வகுப்புகள் இருப்பதாகக் கூறி மாணவியை வரவழைத்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார் என மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்துகொண்டிருக்க, தற்போது மகளிர் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனாந்த்,  Sexual harasment, ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல், ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை, பள்ளியில் நடைபெறும் பாலியல் குற்றங்கள்,
சேத்துப்பட்டு பள்ளி ஆசிரியரின் பாலியல் தொந்தரவு

By

Published : May 28, 2021, 9:51 PM IST

சென்னை: கே.கே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்தப் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, பல பள்ளி மாணவிகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவு சம்பந்தமான விஷயங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பகிர்ந்து வருகின்றனர்.

குவியும் பாலியல் புகார்கள்

இதனால் சமூக வலைதளம் முழுவதும் இதுபோன் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான புகார்கள் குவிந்து வருகின்றன. அதில் குறிப்பாக, சேத்துபட்டில் இயங்கி வரக்கூடிய மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவிகள், ஆசிரியர் ஆனந்த் மீது கடந்த சில தினங்களாக பாலியல் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் சர்ச்சையாகிய நிலையில், ஆசிரியர் ஆனந்தை பள்ளி நிர்வாகத்தினர் பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், அந்தப் பள்ளி மாணவிகள் பல முறை ஆசிரியர் ஆனந்த் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், உயர்கல்வித் துறை செயலர், பள்ளி நிர்வாகம் ஆகியவற்றிற்கு பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

'தந்தை மாதிரி' எனக்கூறி தனியாக அழைத்த ஆசிரியர்

அதில், ஆசிரியர் ஆனந்த் கடந்த 2005-2006ஆம் ஆண்டு தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றிய போது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில், அவரது விபரங்கள் குறித்து விசாரிக்காமல் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் சேர்த்துள்ளனர். தந்தை எனக்கூறி பல மாணவிகளுக்கு வகுப்பறைகளில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து புகார் அளிக்க மாணவிகள் சென்றால் தேர்ச்சி பெறவிடாமல் செய்து விடுவதாகவும் ஆசிரியர் ஆனந்த் மிரட்டி வந்துள்ளார்.

ஆசிரியர் ஆனாந்த் மீது சமூக வலைதளங்களில் வெளிவரும் புகார்கள்

மாணவிகளின் செல்போன் எண்கள், வீட்டு முகவரி போன்றவற்றை ரகசியமாகத் திருடி மாணவிகளை மிரட்டி அதன் மூலம் ஆசிரியர் ஆனந்த் ஆபாச மெசேஜ்களையும் அனுப்பி வந்துள்ளார். மேலும், சிறப்பு வகுப்பு காலை 7 மணிக்கு இருப்பதாக குறிப்பிட்ட மாணவிக்கு மட்டும் மெசேஜ் அனுப்பி பள்ளிக்கு வரவழைத்தும், இரவு நேரத்தில் கோச்சிங் வகுப்பு நடத்தும்போது பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில், அதனை பொய் புகார் என நம்பவைத்தார்.

மாணவிகள் அனுமதியின்றி கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, மடியில் உட்கார வைப்பது போன்ற வக்கிரமான செயல்களை ஆசிரியர் ஆனந்த் செய்து வந்த போது 11ஆம், 12ஆம் வகுப்பு மாணவிகள் தங்கள் கல்வி பாதிக்கப்படும் என்பதால் பல பெண்கள் புகார் அளிக்காமல் இருந்து வருவதாக அந்தப் புகாரில் கூறியுள்ளனர்.

பாயுமா போக்சோ?

ஆசிரியர் ஆனந்த், தேர்வு நடைபெறுவதற்கு முன்பு கோயில்களுக்கு செல்லலாம் என மூன்று மாணவிகளை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு செல்வது வழக்கம். இதற்கு மறுப்பு தெரிவித்தால் குறிப்பிட்ட மாணவியைக் குறித்து கேவலமான கருத்துகளை சக மாணவிகளின் முன்பு தெரிவிப்பார். ஆசிரியர் ஆனந்த் பற்றி இதுவரை 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளிடம் இருந்து புகார்கள் வந்துள்ளதாகவும், ஆசிரியர் ஆனந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலும் அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவிகள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

மகளிர் காவலர்கள் விசாரணை

இது தொடர்பாக, கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவலர்கள் தங்கள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், உயர்கல்வித் துறை செயலர், பள்ளி நிர்வாகம் ஆகியவற்றுக்கு புகார் அனுப்பிய முன்னாள் மாணவிகளிடம் விசாரணை நடத்தவும் காவல்துறை திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆசிரியர் ஆனந்த் குறித்த தகவல்களை சேகரித்து நேரில் வரவழைத்து விசாரிக்கவும் காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

’பத்ம சேஷாத்ரி’ ராஜகோபால்

இதற்கிடையில் சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு அப்பள்ளி ஆசிரியர் ராஜகோபால் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு பாலியல் புகார் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் புகார் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய காலவர்கள் முடிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து, ஆசிரியர் ராஜகோபால் மீது பாலியல் புகார் அடுத்தடுத்து வந்து கொண்டிருப்பதால் அசோக் நகர் மகளிர் காவலர்கள் அவரை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். இன்று (மே.28) அல்லது திங்கட்கிழமை (மே.31) போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’பெற்றோர்களே புரிந்துக்கொள்ளுங்கள்... இவ்வளவு தான் போக்சோ!’

ABOUT THE AUTHOR

...view details