சென்னை மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்காதது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த முறை இந்த வழக்கில், நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை இரு வாரங்களுக்கு, சுங்கச்சாவடிகளில் 50 விழுக்காடு கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், “சாலையில் உள்ள குண்டுகுழிகள் மூடப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் சாலையை மீண்டும் அமைக்க இயலாது” என தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “இந்த சாலையில் பல குண்டுகுழிகள் நிரப்பப்படவில்லை. பெயரளவில் மட்டுமே பணிகள் நடந்துள்ளன. மதுரவாயல் - வாலாஜா சாலை எப்போது அமைக்கப்பட்டது? எப்போது மீண்டும் அமைக்கப்பட்டது? முறையாக பராமரிக்காத சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க எந்த சட்டம் வகை செய்கிறது? லோனாவாலா, ஆக்ரா நெடுஞ்சாலைகள் மட்டும் தான் தேசிய நெடுஞ்சாலைகளா? இருங்காட்டுக்கோட்டை பகுதியில் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ள நிலையில், வெளிநாட்டு பிரதிநிதிகள் வரும் போது, நமது நாட்டை பற்றி என்ன நினைப்பார்கள்? உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ்களுக்கு தனி வழி ஏற்படுத்தாதது ஏன்? சாலையை மீண்டும் அமைக்க திட்டமிட்டு, ஏழு ஆண்டுகளாகிறது. எப்போது ஆறு வழிச்சாலை திட்டம் முடிவடையும்” என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.