சென்னை: மதுரவாயல் - வாலாஜா இடையிலான நெடுஞ்சாலை முறையாக பராமரிக்காதது தொடர்பாக, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை அங்குள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 விழுக்காடு மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக அங்கு 50 சதவீத சுங்ககட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை முடித்த நீதிமன்றம்
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரவாயல் - வாலாஜா இடையிலான நெடுஞ்சாலை தற்போது சீரமைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதனால் கடந்த இரு ஆண்டுகளாக 50 விழுக்காடு சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த இந்த இரு சுங்கச்சாவடிகளில், இனி 100 விழுக்காடு சுங்க கட்டணம் வசூலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வள்ளலார் பிறந்தநாள், 'தனிப்பெருங்கருணை தினமாக' கொண்டாடப்படும் - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு