சென்னை:மதுரை மாவட்டத்தைச்சேர்ந்தவர் பாலா (எ) மதுரை பாலா. பெரும் ரவுடியான இவர் மீது கொலை, ஆள்கடத்தல் உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூலிப்படை தலைவனான பாலா, இருந்த இடத்திலேயே ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. பிரபல ரவுடியான மயிலாப்பூர் சிவகுமார் உள்பட பல பேரை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டுகொடுத்துவிட்டு நீதிமன்றத்தில் சரண் அடைவதை பாலா வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நீண்ட மாதங்களாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் மதுரை பாலா தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை பிடிக்க காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், அவர் தனது கூட்டாளிகளுடன் சத்தீஸ்கர் மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூருக்குச் சென்ற ரவுடிகள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர், மதுரை பாலா மற்றும் அவரது கூட்டாளிகளான சிவா மற்றும் மதன் ஆகிய மூவரை கைது செய்தனர்.