குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் அரசியல் கட்சிகள், மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய கடும் தாக்குதலைக் கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது.
இதனால் பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்திக்கவோ, பல்கலைக்கழகத்திற்குள் நுழையவோ யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனிடையே, பல்கலைக்கழகத்தில் மூன்று நாட்கள் வகுப்புகள் நடைபெறாது என்பதை துணைவேந்தர் மற்றும் பதிவாளர் முறையாக அறிவிக்கவில்லை என்றும், திடீரென விடுதியை காலி செய்து வீட்டிற்கு செல்லுமாறு மிரட்டுவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.