வர்த்தகர்கள் சந்திப்புக் கூட்டம்
மத்திய அரசின் வர்த்தகத் துறை மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) இணைந்து இந்தியா- கம்போடியா, லாவோ, மியான்மர், வியட்நாம் (CLMV) ஆகிய நாட்டு வர்த்தகர்கள் சந்திப்புக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு தொழில் துறை முதன்மைச் செயலர் முருகானந்தம், இந்திய தொழில் துறை கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவின் தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில், கம்போடியா, லாவோ, மியான்மர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு இருந்த வரலாற்று உறவு, பண்பாடு, கலாசார உறவு ஆகியவை குறித்தும், தற்காலத்தில் இணைந்து வர்த்தகம் செய்வதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
வர்த்தக மையப்புள்ளி
நிகழ்ச்சியில் பேசிய கம்போடியா, லாவோ, மியான்மர், வியட்நாம் நாடுகளின் தொழில்துறை தூதுவர் முகோபாத்யாய், "உலக பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக தற்போது சென்னை மாறிவருகிறது. இன்றைய சூழலில் உலக நாட்டுத் தலைவர்கள் தங்கள் நாட்டு மக்களின் நலன் மட்டுமே முக்கியம் என்ற நோக்கில் சுயநலத்துடன் செயல்படுகின்றனர்.
வர்த்தகப் போர்
அமெரிக்கா- சீனா வர்த்தகப் போர் மூலம் நமது நாடுகள் பயன்பெற முடியும். கம்போடியா, லாவோ, மியான்மர், வியட்நாம் நாடுகளிலிருந்து மூலப்பொருள்களை வாங்கிச் சென்று மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரித்து உலகெங்கும் விற்பனை செய்துவருகிறது சீனா. இதனை மாற்றும் வகையில் எங்கள் நாடுகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடுகள் செய்ய முன்வர வேண்டும்" என்றார்.