சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்தை செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அமர்வு நேற்று (ஏப்ரல் 7) தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், "அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின்படி மாநில அரசு எடுத்துள்ள கொள்கை முடிவை எதிர்க்க முடியாது. 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
மாநில அரசு, ஆணையம் அமைத்து சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியின் மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.46,686 ஆக உள்ளது. அதே சமயம் சிபிஎஸ்இ மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 4,68,413 ஆகவும், ஐசிஎஸ்இ மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.4,77,263 ஆகவும் உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களைப் பொருத்தமட்டில் 83 விழுக்காடு தந்தையர்களும், 65 விழுக்காடு தாயாரும் தினக்கூலி பணியாளர்கள். சமத்துவத்தை தீர்மானிக்கும் போது இந்த அம்சங்களை ஒதுக்கிவிட முடியாது.
பள்ளிகள் அடிப்படையில் மாணவர்களை வகைப்படுத்துவது காரணமற்றது எனக்கூறி விட முடியாது. சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்கள், தடைகளை தாண்டி வர ஏதுவாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், இந்த சட்டம் அரசியலமைப்பு சாசனத்துக்கு விரோதமானது அல்ல. 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது அந்த இட ஒதுக்கீட்டின் வரம்பை அதிகரிக்கவில்லை. அதேநேரம் அனைத்து பிரிவிலும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இந்த பலன் சென்றடையும்" என்றனர்.