தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாகூர் தர்கா தற்காலிக நிர்வாக குழுவை ஏன் கலைக்கக் கூடாது ? - நீதிமன்றம் கேள்வி

நாகூர் தர்கா நிர்வாகத்தைக் கவனிக்க 4 மாதங்களுக்கு எனக் குறுகிய காலத்துக்கு நியமிக்கப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளாகத் தொடர்வது ஏன் என விளக்கமளிக்க தற்காலிக நிர்வாக குழுவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகூர் தர்கா தற்காலிக நிர்வாக குழுவை ஏன் கலைக்கக் கூடாது சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
நாகூர் தர்கா தற்காலிக நிர்வாக குழுவை ஏன் கலைக்கக் கூடாது சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

By

Published : Feb 24, 2022, 2:01 PM IST

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள சுமார் 450 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாகூர் தர்கா இஸ்லாமிய புனித ஸ்தலங்களில் முக்கியமான, சமூக நல்லிணக்கத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் நாகூர் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) திருவிழா உள்ளன. நாகை மாவட்டத்தைச் சுற்றி உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்குச் சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன.

இந்தச் சொத்துகளைப் பல்வேறு நபர்கள் கையகப்படுத்தி விற்பதாகப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், நாகூர் தர்கா நிர்வாக முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தர்கா நிர்வாகத்தைக் கவனிக்க நான்கு மாத காலத்துக்கு என்ற அடிப்படையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் அலாவுதீன் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி அக்பர் அடங்கிய தற்காலிக நிர்வாக குழுவை நியமித்து 2017 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், தர்காவின் 465வது உர்ஸ் விழாவில் பங்கேற்க முஹாலி முத்தவல்லி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் கோரிக்கையைப் பரிசீலிக்க உத்தரவிட்டது. இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தர்காவின் தற்காலிக நிர்வாக குழு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, இன்று (பிப்.24) தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத்பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வக்புவாரியம் தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகவும், இந்த தகவலைத் தற்காலிக நிர்வாக குழுவுக்கு அப்போதே தெரிவித்த போதிலும், தர்காவின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தி இந்த மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, நான்கு மாதங்களுக்கு என நியமிக்கப்பட்ட தற்காலிக நிர்வாக குழு, இன்னும் தொடர்வது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குழுவைக் கலைப்பது குறித்து மார்ச் 10ஆம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படியும் உத்தரவிட்டனர். அதுவரை தர்கா விவகாரங்களை மேற்கொள்ளக் கூடாது எனத் தற்காலிக நிர்வாக குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், தர்காவுக்காகவும், தற்காலிக நிர்வாக குழுவுக்காகவும் மேற்கொண்ட செலவு விவரங்களைத் தாக்கல் செய்யக் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தற்காலிக குழு செய்த செலவு விவரங்களைத் தாக்கல் செய்ய வக்பு வாரியத்துக்கும் உத்தரவிட்டனர். மேல் முறையீட்டு வழக்கு செல்லாததாகி விட்டதாகக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், தற்காலிக நிர்வாக குழுவுக்கு எதிராகத் தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையை மார்ச் 10ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: Watch: தமிழ்நாடு எங்கும் வலிமைக் கொண்டாட்டம்...!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details