அமெரிக்காவைச் சேர்ந்த ப்ராங்க்ளின் டெம்பிள்டன் அசட் மேனேஜ்மென்ட் எனும் நிதி நிறுவனம், இந்தியாவில் பரஸ்பர நிதி (மியூச்சுவல் பண்ட்) திட்டங்களை வழங்கி வந்தது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், கரோனா பாதிப்பைக் காரணம் காட்டி, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், ஆறு பரஸ்பர நிதிய திட்டங்களை முடித்துக் கொண்டதாக 2020 ஏப்ரல் மாதம் அந்நிறுவனம் அறிவித்தது.
இதன் மூலம், நாடு முழுவதும் 3 லட்சத்து 15 ஆயிரத்து 621 முதலீட்டாளர்களிடம் இருந்து 28 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த பிரேம்நாத் சங்கர் என்பவர் அளித்தப்புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப் பிரிவினர், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கோரி பிரேம்நாத் சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், 'மோசடி தொடர்பாக, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளின் கீழ், இந்த வழக்குப் பதிவு செய்யவில்லை எனவும், பொருளாதார குற்றப்பிரிவு தொடங்கியது முதல் எத்தனை வழக்குகள் பதியப்பட்டன, எத்தனை வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளது என அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும்' எனவும் கோரியுள்ளார்.