சென்னை மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியரான மருத்துவர் டி. சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெசாலிட்டி, டி.எம், எம்.சி.ஹெச்.) மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடங்களை தமிழ்நாடு அரசு ஒதுக்கி வந்தது. 2017ஆம் ஆண்டு முதல், நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்புகளின் கலந்தாய்வை நடத்துவதற்கான அலுவலராக சுகாதாரப் பணிகளுக்கான தலைமை இயக்குனரை நியமித்து மத்திய சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்தது.
அதன்பிறகு அரசு மருத்துவர்களுக்கான 50 விழுக்காடு இடங்களை ஒதுக்குவது நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்ததுடன், உச்ச நீதிமன்றத்தை மருத்துவர்கள் சங்கம் நாடிது.
இதனிடையே கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையில், 50 விழுக்காடு இடங்களை அரசு மருத்துவர்களுக்கு வழங்குவதாகவும், மீதமுள்ள இடங்களை சுகாதாரத் துறை தலைமை இயக்குனரின் ஒதுக்கீட்டு கீழ் வழங்கப்படும் என்றும், இது 2020-21ஆம் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்திருந்தது.
பின்னர் இதுதொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு அரசின் அரசாணையின் செல்லுபடியாகும் தன்மை குறித்து எந்த கருத்தையும் சொல்லவில்லை. ஆனால் கலந்தாய்வு தொடங்கி விட்டதால் 2020-21ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என குறிப்பிட்டிருந்தது. இந்த உத்தரவு 2020-21க்கு மட்டுமே பொருந்தும் அந்த குறிப்பிட்டிருந்தது.
அந்த வழக்கு விசாரணைக்கு வராத நிலையில், 2021-22ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்காக மருத்துவ படிப்புகளுக்கான தேசிய கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பிலும் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடங்களை ஒதுக்கி, மாணவர் சேர்க்கையை நடத்த சுகாதார பணிகள் தலைமை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்குவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பதால், தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி இடங்களை ஒதுக்கும்படி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஸ்டாலின் மனு