சென்னை: மதுரையை சேர்ந்த இரு பெண்கள், நட்புடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இந்நிலையில், இருவரையும் காணவில்லை என பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களை துன்புறுத்தக் கூடாது. இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களை துன்புறுத்தினால், புதிய விதியை கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று (ஏப்ரல் 8) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசேகரன், இந்தியா முழுவதும் 10 கோடி பேர் மூன்றாம் பாலினத்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு என்பது சமுதாயத்தில் இல்லை. அதனால், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது போல மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க வேண்டும். இட ஒதுக்கீடு கிடைத்தால் வேலை வாய்ப்பு பெருகி பாலியல் தொழிலில் ஈடுபடுவது குறையும்.
மூன்றாம் பாலினத்தவர்கள் பிரச்சனைகள் குறித்து வருங்கால தலைமுறையினருக்கு புரிதல் ஏற்படும் வகையில் மருத்துவர்கள், என்.ஜி.ஓ, அரசு சார்பில் 96 வழக்கறிஞர்களுக்கு பயிற்சி நடத்தப்பட்டது. இன்று (ஏப்ரல் 9) சிறப்பு பயிற்சி முடிவடைகிறது. இந்த கூட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பிரச்சனைகள் குறித்து பெற்றோர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.