தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’எனது இரண்டாவது வீடு சென்னை உயர் நீதிமன்றம்' - நீதிபதி வினீத் கோத்தாரி பெருமிதம்! - ஏ.பி.சாஹி

சென்னை: மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்ததில் முழு திருப்தி அடைந்ததாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

vineeth gothari
vineeth gothari

By

Published : Jan 2, 2021, 12:56 PM IST

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி ஓய்வு பெற்றதை அடுத்து, இரண்டாவது மூத்த நீதிபதியான வினீத் கோத்தாரி, பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து வந்தார். இந்நிலையில், அவர் குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, உயர் நீதிமன்றத்தில் இன்று காணொலி மூலம் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தனது உரையில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக, 2018 இல் பொறுப்பேற்ற வினீத் கோத்தாரி, இந்த இரண்டு ஆண்டுகளில் 8 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் ஏற்புரையாற்றிய பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, பெருமைக்குரிய சார்ட்டர்டு உயர் நீதிமன்றமான, சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியதை பெருமையாக கருதுவதாக குறிப்பிட்டார்.

தனது இரண்டாவது வீடான சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து குஜராத்திற்கு மாற்றப்பட்டது வேதனையளிப்பதாகக் கூறிய அவர், தான் பணியாற்றிய ராஜஸ்தான், கர்நாடக உயர் நீதிமன்றங்களை ஒப்பிடும் போது, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் திறமையானவர்கள் என்றார்.

இங்கு பணியாற்றிய ஒவ்வொரு நாளும் சிறந்த அனுபவமாக இருந்ததாகவும், சிறு கசப்புணர்வு கூட இல்லை என்றும் தெரிவித்த நீதிபதி வினீத் கோத்தாரி, கரோனா தொற்று காலத்தில் ஆன் லைன் மூலம் வழக்குகளை விசாரித்தது நல்ல அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார். மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்தது, தனக்கு முழு திருப்தியை அளித்ததாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்ஜிப் பானர்ஜிக்கு, வரும் திங்கட்கிழமை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவியேற்பு செய்துவைக்கவுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா -பாகிஸ்தான் இடையே சிறைக்கைதிகள் பட்டியல் பரிமாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details