சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்குப் பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோயில்கள் சம்பந்தமான விஷயங்களில் கவனம் செலுத்தாமல் பிற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளது.
கோயில்களில் சிலை திருட்டு
திருநெல்வேலி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், சமீப காலங்களில் தமிழ்நாடு கோயில்களிலிருந்து சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்குப் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் இந்தியப் பிரதமர் அமெரிக்கா சென்றிருந்த போது, அங்கு இருந்த புன்னைநல்லூர் சோழர்கால நடராஜர் வெண்கலச் சிலை உள்ளிட்ட 157 சிலைகள் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கோயில்களில் மனித பாதுகாப்பு வேண்டும்
கோயில்களில் போதுமான பாதுகாப்பு இல்லாததே சிலை திருட்டுகளுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், தற்போது கோயில்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், மனிதப் பாதுகாப்பால் மட்டுமே, இதுபோன்ற திருட்டு சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.டி.எம். மையங்களுக்குக் கூட இரவு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கியமான கோயில்களுக்குப் பாதுகாவலர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், சில கோயில்களில் இரவு காவலர்கள் நியமிக்கப்பட்ட போதும், அவர்களுக்கு 3,500 முதல் 5,500 ரூபாய் வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.