சென்னை: நவம்பர் மாத இறுதியில் தக்காளி விலை உச்சம் அடைந்துள்ளதால், கோயம்பேடு சந்தையில் மூடிக்கிடக்கும் தக்காளி கிரவுண்டை திறக்க வேண்டும் என்று தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அதில், தக்காளி கிரவுண்டை திறப்பதன் மூலம் வெளி மாநிலங்களிலிருந்து தக்காளிகளை லாரியில் கொண்டுவந்து இறக்கி, குறைந்த விலையில் மக்களுக்குத் தக்காளியை விற்பனை செய்ய முடியும் என்று கூறியது.
தக்காளி விலை குறையும் வரை
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "தக்காளி விலை குறையும்வரை பொதுநலன் கருதி கோயம்பேடு சந்தையில் தக்காளிகளைக் கொண்டுவந்து இறக்குவதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு உத்தரவிட்டு, இடத்தின் பயன்பாடு குறித்து அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று (டிசம்பர் 15) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட அறிக்கையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கவில்லை என்றும், 50.1 சென்ட் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தக்காளி விற்பனை செய்யக் கூடாது
மேலும், மார்கெட் கமிட்டி தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட அறிக்கையில், 94 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கடைகளுக்கு அருகில் வாகன நிறுத்த வசதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தக்காளி இறக்கும் இடத்தில் விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கைவைக்கப்பட்டிருந்தது.