அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது, பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகள்படி நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து மட்டும் வாதிடும்படி இரு தரப்பு வழக்கறிஞர்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, பொதுக்குழுவின்போது கட்சி விதிகளைப் பின்பற்றாமல் இருந்திருந்தால், நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.
இதையடுத்து, பன்னீர்செல்வம், வைரமுத்து தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர், ஜெயலலிதா மறைவுக்குப்பின் கட்சியில் பிளவு ஏற்பட்டது குறித்தும், பின் இரு பிரிவுகளும் இணைந்து 2017இல் பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் பதவியை கலைத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது குறித்தும், இரு பதவிகளுக்கும் அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் நடத்துவது என விதிகளில் திருத்தம் செய்தது குறித்தும் விளக்கினர்.
ரூல்ஸ் பின்பற்றப்படவில்லை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காவிட்டால் இரு பதவிகளும் காலியாகி விடும் என்றால், அது பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்றும், பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இருவராலும் செயல்பட முடியவில்லை எனக்கூறுவது தவறு என்றும், பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பான விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் வாதிட்டனர்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி எந்தக் கூட்டமும் கூட்ட முடியாது எனவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் விருப்பத்தை 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் செல்லாததாக்கி விட முடியாது எனவும் பன்னீர்செல்வம், வைரமுத்து தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
எடப்பாடி பழனிசாமி வக்கீலிடம் சரமாரி கேள்விகேட்ட நீதிபதி!: எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண் தனது வாதத்தை தொடங்கும் முன், நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக்கூறி அந்தப்பதவியை கலைத்துவிட்டு மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன்? எனவும், பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா எனவும் விளக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார்.