திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்த ஜெயவேல், தேவகி உள்ளிட்ட 21 பேர் தாக்கல் செய்த மனுவில், ’திருத்தணியில் உள்ள நிலமற்ற மற்றும் தினக்கூலித்தொழிலாளர்கள் என 130 பேர் பயனடையும் வகையில் வீடு கட்டுவதற்காக கடந்த அதிமுக அரசு ஒதுக்கியதாகவும், அந்த இடத்திற்கான பட்டாவை 2020ஆம் ஆண்டு திருத்தணி தாசில்தார் உறுதி செய்து வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பட்டா நிபந்தனைகளின்படி, நிலம் ஒதுக்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் வீடு கட்டப்பட வேண்டும் என்றாலும், கரோனா பரவல் கட்டுப்பாடுகள் மற்றும் ஒதுக்கப்பட்ட நிலத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கான மனைகளின் எல்லைகளை குறிக்காதது போன்ற காரணங்களால் மனைகளை அடையாளம் காண முடியாததால், வீடு கட்ட இயலவில்லை.
வீட்டுமனைகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தாரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.