சென்னை:மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் அவற்றின் பெண்கள் என 32 வார்டுகள் ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள 168 இடங்களில் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும் , ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கபட்டுள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில், பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடாக, 84 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. மண்டல வாரியாக வார்டுகளை பிரித்து, கூடுதல் வார்டுகளை பெண்களுக்கு ஒதுக்குவதால், அவர்களுக்கு கூடுதல் வார்டுகள் வருவதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வழக்கறிஞர் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனுவில், மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக பிரித்து வழங்க வேண்டும் கோரிக்கை வைத்திருந்தார்.