கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் வழக்குகளை விசாரித்து வருகின்றன. இந்நிலையில், மே மாதம் வழக்கமாக விடப்படும் கோடை விடுமுறையை தள்ளிவைப்பது என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
தற்போது, வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கூட்டினார். இந்தக் கூட்டத்தில், மே மாதத்தில் வழக்கமான நீதிமன்றப் பணிகளை மேற்கொள்வதற்குப் பதில், இரண்டு இரு நீதிபதிகள் அமர்வும், 10 தனி நீதிபதிகளும் வழக்குகளை, வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் விசாரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, மதுரைக் கிளையில் நீதிபதிகள், தங்கள் அறைகளில் இருந்து வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் வழக்குகளை விசாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றங்கள் விவகாரத்து வழக்குகள், போக்சோ வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள் மற்றும் பிணை – முன் பிணை மனுக்கள் போன்ற வழக்குகளை வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் விசாரிப்பது எனவும், நீதிமன்ற பணியாளர்களை ஷிப்ட் முறைப்படி பயன்படுத்த அனுமதிப்பது எனவும் நீதிபதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.