முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை, 2015ஆம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் ஃபவுன்டேஷன் என்ற நிறுவனத்திற்கு, ஒரு ஏக்கர் 4.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால், சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் 3 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு, விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு மட்டுமே வருமான வரித்துறையில் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் 6.38 கோடி ரூபாயும், அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் 1.35 கோடி ரூபாயும் வருமான வரி கணக்கில் காட்டப்படவில்லை எனக் கூறி இருவர் மீதும் வருமான வரித்துறை 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இருவரின் மனுக்களை கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து, தங்களுக்கு எதிரான இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித் தனியே மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் தலைமையிலான அமர்வின் முன்பாக நடைபெற்று வருகிறது.