இசையமைப்பாளர் இளையராஜா இசையில் 1980-களில் வெளியான 20 தமிழ் படங்கள் உள்பட 30 படங்களின் இசைக்கு தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றுள்ளதால், இந்த இசையை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை கோரி இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரித்த தனி நீதிபதி, இந்த 30 படங்களின் இசை இந்தியன் ரெக்கார்டு கம்பெனிக்கு சொந்தமானவை. அவற்றை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அந்த மேல் முறையீடு மனுவில், "30 பட தயாரிப்பாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனத்திற்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. பட தயாரிப்பாளர்களிடம் படத்தின் காப்புரிமை மட்டுமே உள்ளது. இசை பணிகளுக்கு தயாரிப்பாளர்கள் முதல் உரிமையாளர்கள் கிடையாது.
இந்த விவகாரம் வர்த்தகம் சம்பந்தப்பட்டது என்பதால், அது சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் விசாரிக்க வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவு அதிகாரவரம்புக்கு அப்பாற்பட்டது என்பதால் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கை இன்று (ஏப்.4) விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க இந்தியன் ரெக்கார்டு கம்பெனி உள்ளிட்ட மூன்று இசை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
இதையும் படிங்க:பத்து ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த தம்பதிக்கு விவாகரத்து வழங்க மறுப்பா...?