தமிழ்நாடு

tamil nadu

துணைவேந்தர் சூரப்பா பதவி நீட்டிப்பிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

By

Published : Jan 29, 2021, 5:31 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதை எதிர்த்து, டிராபிக் ராமசாமி தாக்கல்செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம், மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.

துணை வேந்தர் சூரப்பா பதவி நீட்டிப்பிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
துணை வேந்தர் சூரப்பா பதவி நீட்டிப்பிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சூரப்பா அப்பதவியில் நீடிக்க எதிர்ப்புத் தெரிவித்து டிராபிக் ராமசாமி கடந்த மாதம் பொதுநல மனுவைத் தாக்கல்செய்திருந்தார். அதில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, ஒருவர் இருமுறைக்கு மேல் துணைவேந்தராக நியமிக்க முடியாது என்றும், சூரப்பா கடந்த 2009 முதல் 2015 வரையிலான ஆறு ஆண்டுகள் பஞ்சாப் மாநிலம் ரோபரில் உள்ள ஐஐடி-யில் இயக்குனராக பதவி வகித்துள்ளதாகவும், 2016 -2017இல் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் டீன் பதவியையும் வகித்துள்ளார் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐஐடி இயக்குனர் பதவி என்பது துணைவேந்தர் பதவிக்கு நிகரானது என்றும், அந்த அடிப்படையில் ஏற்கனவே இரு முறை பதவி வகித்துள்ள அவர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்துள்ளது, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு விரோதமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஐஐடி இயக்குனர், இந்திய அறிவியல் கல்வி நிறுவன டீன் பதவிகள், துணைவேந்தர் பதவிகளுக்கு இணையானது என்பதற்கான எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் டிராபிக் ராமசாமி, கூடுதல் ஆவணங்களுடன் புதிதாக இதே கோரிக்கையுடன் பொது நல வழக்கைத் தாக்கல்செய்தார். அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, இந்த வழக்கில் பொது நலன் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், அரசு பதவி வகிப்பவர்களுக்கு எதிராக கோ வாரண்டோ மனுவைத்தான் தாக்கல்செய்ய முடியும் எனவும் கூறி, டிராபிக் ராமசாமியின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க...ஜெ வீட்டு சாவி: உத்தரவுக்கு இடைக்காலத் தடை

For All Latest Updates

TAGGED:

Madras HC

ABOUT THE AUTHOR

...view details