தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'7.5% மருத்துவ இடஒதுக்கீடு: புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவருக்கு சேர்க்கை வழங்க முடியாது'

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவருக்கு சேர்க்கை வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

By

Published : Jan 29, 2021, 4:52 PM IST

Madras HC clears TN 7.5 percent reservation not applicable for Puducherry government school student
Madras HC clears TN 7.5 percent reservation not applicable for Puducherry government school student

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டின்கீழ், மாணவர் சேர்க்கை வழங்கக்கோரி புதுச்சேரி ஆர்.எஸ்.பாளையத்தில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் அரசுப் பள்ளியில் படித்த விழுப்புரம் மாவட்டம், குமுளம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தனக்கு புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவப்படிப்பில் சேரமுடியாது என்பதால், தமிழ்நாட்டைச்சேர்ந்தவன் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டில் இடமளிக்க கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, புதுச்சேரி மாநிலத்தில் படித்த மாணவர்களுக்கு அரசாணையை நீட்டித்து வழங்க உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மணிகண்டன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், புதுச்சேரியில் வசிக்காததால் அந்த அரசு இடமளிக்க மறுப்பதால், தமிழ்நாட்டில் இடமளிக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

அரசு தரப்பில், 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது தமிழ்நாடு மாநில எல்லையில் வசித்து, இந்த எல்லைக்கு உட்பட்டப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கும்படி சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், மனுதாரருக்கு ஏற்றவாறு சட்டத்தை திருத்தினால், எல்லையில் உள்ள அனைத்து மாவட்ட மாணவர்களும் இதே கோரிக்கையை முன்வைப்பர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு இடஒதுக்கீட்டை புதுச்சேரி மாணவருக்கும், புதுச்சேரி இடஒதுக்கீட்டை தமிழ்நாடு மாணவருக்கும் வழங்க முடியாது எனக் கூறி, அந்தந்த மாநிலத்தில் வசித்து, அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கே வழங்க முடியும் எனத் தெரிவித்து, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதையும் படிங்க...தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தை: பெயர் சூட்டிய ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details