சென்னை :டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதாரத்துறை ஆய்வகத்தில் மரபணு பகுப்பாய்வு கூடத்தை திறந்து வைத்து, இளநிலை உதவியாளர்கள் 91 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
இதில் குறிப்பாக, மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் 51 பேருக்கும், பொது சுகாதார இயக்குனரகம் சார்பில் 15 பேருக்கும், ஊரக நலப்பணிகள் இயக்ககம் சார்பில் 15 பேருக்கும், மாநில சுகாதார போக்குவரத்து துறையை சார்ந்த 9 பேருக்கும், இந்திய மருத்துவம், ஹோமியோபதி இயக்ககம் சார்பில் மொத்தம் 91 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.
17ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - மரபணு பகுப்பாய்வு கூடம்
இந்நிகழ்வின் போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியம், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். நிறைவாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியம்,"மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் உருமாறிய கரோனா தொற்றை கண்டறிய மரபணு பகுப்பாய்வு மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
இந்திய அளவில் 23 இடங்களில் இந்த பரிசோதனை ஒன்றிய அரசின் ஒத்துழைப்போடு நடத்தப்பட்டு வருகிறது. பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு தான் மாதிரிகள் இது நாள் வரை சோதனைக்கு அனுப்பபட்டது. முடிவுகள் கிடைக்க ஒரு மாதம் வரை ஆகும். இந்த சோதனையின் மூலமே டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டது.
ஒரு மாதிரி பரிசோதிக்க 5 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலை இருந்தது. எனவே முதலமைச்சர் தமிழ்நாட்டில் ஒரு ஆய்வாகத்தை அமைக்க உத்தரவிட்டதன் பேரில், நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மரபணு பகுப்பாய்வு கூடம் உருவாக்கபட்டுள்ளது. ஏற்கனவே பெங்களூருவில் பயிற்சி முடித்த பிறகே இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். 4,5 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளை பெற முடியும்.
உளவியல் ஆலோசனை வழங்க திட்டம்
கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் பரிசீலிப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
தனுஷ் என்ற மாணவர் அச்ச உணர்வு காரணமாக தன்னை தானே மாய்த்து கொண்டுள்ளார். மாணவர்கள் இது போன்ற தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். தேர்வு முடிவுகள் எப்படி இருந்தாலும், மாணவர்கள் மனதிடத்துடன் இருக்க வேண்டும். இது தோல்வி அல்ல, வெற்றியின் முதல் படி என மாணவர்கள் இருக்க வேண்டும்.
மரபணு பகுப்பாய்வுக் கூடம் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க திட்டமிட்டு உள்ளோம். கடந்த கால ஆட்சியாளர்கள் நீட் தேர்வு குறித்து எடுத்த நடவடிக்கைக்கு காரணம் சொல்லாமல், புறக்கணித்ததற்காண காரணங்களை, குடியரசு தலைவர் கோரி இருந்தார். திமுக தேர்தல் அறிக்கையில் முதல் கூட்ட தொடரில் நீட் மசோதா நிறைவேற்றபட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற முயற்சிக்கும் என தான் கூறப்பட்டுள்ளது.
சட்ட முன்வடிவில் வித்தியாசம்
ஏற்கனவே அனுப்ப பட்ட சட்ட முன்வடிவுக்கும், நேற்று அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுக்கும் வித்தியாசம் உள்ளது. உரிய தரவுகள் இல்லாமல் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றபட்ட சட்ட முன்வடிவு திரும்பி அனுப்பப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து அவற்றை சாத்தியப்படுத்துவதற்கான ஏ.கே ராஜன், உயர்மட்ட குழு 86 ஆயிரத்து 342 பேரிடம் பெறப்பட்ட மனுக்கள் வாயிலாக ஆராய்ந்து அனுப்பப்பட்ட பரிந்துரையின் பேரில் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது கேலிக் கூத்தாக உள்ளது. நிச்சயம் நீட் தேர்விலிருந்து விலக்கு பெரும் முயற்சிகளை முதலமைச்சர் எடுப்பார். ஆளுநர் கையெழுத்திட்ட பிறகு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு செல்லும்.
17ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம்
அரியலூரில் ஒரு மாணவி உள்ளிட்ட 16 பேர் பேர் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வை வைத்து நாடகமாடுவதாக கூறுகின்றனர். ஆனால் யார் நாடகமாடுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
வாரத்துக்கு 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.இதுவரை 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. நாளை மறுநாள் 10 லட்சம் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 17 ஆம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
இதையும் படிங்க: 7 துறைகளில் மோசமான நிதி மேலாண்மையால் கோடிக்கணக்கில் வீண் செலவு- சிஏஜி