சென்னை: உலக குருதி கொடையாளர் தினம் ஜூன் 14ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ABO என்ற ரத்த பிரிவை கண்டறிந்த Karl Landsteiner என்பவரின் பிறந்த நாளே உலக குருதி கொடையாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்வில் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் ஆகியோர் ரத்ததானம் அளித்தனர்.
இந்நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, பாஜக அண்ணாமலை கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து மாவு குறித்து குற்றச்சாட்டு வைத்திருந்தார். ஊட்டச்சத்து பெட்டகம் டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிற்கான டெண்டர் திறக்கப்பட்டு L1 யார் என்று முடிவு செய்திருக்கிறார்கள். பாலாஜி சர்ஜிகல் என்ற நிறுவனம் L1 ஆக வந்துள்ளது.
அண்ணாமலை கூறிய அனிதா டெக்ஸ் கோட் என்ற நிறுவனம் L2 வாக வந்துள்ளது. எனவே அந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்படவில்லை. அண்ணாமலை கூறிய நபருக்கு டெண்டர் வழங்கப்படவில்லை. விதிகளுக்கு உட்பட்டு, மற்றொரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு கூறியதற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பெட்டகத்தின் விலை 2018 டெண்டரில் 1996.41 ஆகும். தற்போது 2180.71 ரூபாய் என்பது டெண்டரில் வந்த குறைந்தபட்ச விலையாகும். கடந்த முறை ஆவின் நெய், ரூ.191.41-க்கு கொடுக்கப்பட்டது. தற்போது ரூ 219.50-க்கு வழங்கப்படுகிறது. அதையும் கூட குறைத்து கேட்க முயல்வோம். ஆவின் விலை 12.6 சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்டகத்தின் ஒட்டுமொத்த விலை 9.6 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த முறைக்கும் தற்போதும் 150 ரூபாய் வித்தியாசம் உள்ளது. எனினும் கூட அந்த நிறுவனத்திடம் பேசி விலை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு ஆண்டில் 11 லட்சம் பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு ஐந்து பேர் டெண்டரில் பங்கேற்றுள்ளனர். ராமச்சந்திரன் என்ற ஒப்பந்ததாரருக்கு கிடைக்க வேண்டும் என்று தான் பாஜக அண்ணாமலை இதை செய்கிறார். அந்த நிறுவனம் technical bidஇல் தகுதியாகவில்லை. திருவாரூரில் மருத்துவர் இல்லாமல் குழந்தை இறப்பு வருந்தத்தக்கது. மருத்துவர்கள் பணி நேரத்தில் வராமல் இருக்கக் கூடாது. உயிர் காக்கும் பணியில் இருக்கிறீர்கள். இது தொடர்ந்தால், மருத்துவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு சினைமுட்டை விவகாரத்தில் அதிகபட்சமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட முடியுமோ அது எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.