சென்னை:பொங்கல் பண்டிகைக்கு முன்பாக கரோனா கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்வார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 100% ஊரடங்கு
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் முழு ஊரடங்கையொட்டி, மேற்கொள்ளப்படும் காவல் துறை கண்காணிப்புப்பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் கூட்டாக சேர்ந்து, சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேரில் ஆய்வு செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்த காட்சி அப்போது அவர்கள், அத்தியாவசியத் தேவைகளின்றி, வெளியில் வரும் நபர்களுக்கு அறிவுரை வழங்கியும் முகக்கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு முகக்கவசங்களையும் வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், 'தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள், முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்; இதுவரை நடைபெற்ற ஊரடங்கிலேயே 100% வெற்றி என்ற நிலையில் இந்த ஊரடங்கு நடைபெற்று வருகிறது.
அத்தியாவசியத் தேவைகளுக்கே அனுமதி
ஆய்வு செய்தபோது பெரும்பாலான இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே வெளியே வந்து செல்கின்றனர். பெரும்பாலான வாகனங்கள் தங்களுடைய மருத்துவத் தேவைகளுக்காக மருத்துவமனைக்குச்செல்வது மற்றும் அத்தியாவசிய தேவைக்குச் செல்வது என்ற நிலை மட்டுமே உள்ளது.
கரோனா தொற்று, நாள் ஒன்றுக்கு 2,000 என்ற அளவில் உயர்ந்துகொண்டே சென்று கொண்டிருக்கிறது.
இதுவரை வந்த பரிசோதனை மாதிரிகளின் அடிப்படையில், நேற்றைய நிலையைப்போல் இன்றைக்கும் இரண்டாயிரம் தொற்று கூடுதலாகும் வாய்ப்புள்ளது.
கரோனா வேகம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். 100% தடுப்பூசி என்ற இலக்கை அடைய பொது மக்களும் பயணிக்க வேண்டும்.
தோழர் சங்கரய்யா உடல்நலம்
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலைப்போராட்ட வீரர் சங்கரய்யாவை, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் ஆரோக்கியமாக இருக்கிறார்.
மருத்துவர்கள், செவிலியர் 250 பேர் பாதிப்பு
அதுமட்டுமல்லாமல், அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் என்று 250 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அவர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
தினந்தோறும் எடுக்கும் பரிசோதனையில் 80% - 85% என்ற எஸ்.ஜீன் டிராப் தொற்று ஏற்படுகின்றது. அதில், 15 விழுக்காடு பேருக்கு மட்டுமே டெல்டா வைரஸ் உள்ளது.
இணை நோய் உள்ளவர்களுக்கும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எஸ்.ஜீன் ட்ராப்பால் யாருக்கும் உயிரிழப்பில்லை
இதுவரை சென்ற எஸ்.ஜீன் ட்ராப்பால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 90 பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களாக இருக்கின்றனர்.
எனவே, உயிர் பாதிப்பு ஒன்றுகூட இல்லை என்ற நிலை மனதிற்கு நிறைவைத் தருகிறது
கண்காணிப்பு பணிகளும் அபராதமும் தீவிரம்
அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்பதை முதலமைச்சர் ஒரு இயக்கமாக மாற்றி உள்ளார். முகக்கவசம் அணிவது தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பான விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மாநகராட்சி அலுவலர்களும் காவல் துறையினரும் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 13 திருமணங்களில் விதிமீறல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 100 நபர்களை விட அதிகமானோர் விதிமுறைகளை மீறிக் கலந்துகொண்டதால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையின் கடமை
தனியார் மருத்துவமனையில் எஸ்.ஜீன் டிராப் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற வருபவர்களின் தகவலை மாநகராட்சி சுகாதாரத்துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களையும் பாதுகாப்பது சுகாதாரத்துறையின் கடமை என்ற அடிப்படையில் தனியார் மருத்துவமனைகள் மாநகராட்சியின் சுகாதாரத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை
அவ்வகையில், தகவல் தெரிவிக்காத ஆறு தனியார் மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் என்ற நிலையைத் தாண்டி, அந்தக் கடைகளை மூடும் நிலைக்கு யாரும் கொண்டுசென்றுவிட வேண்டாம்.
பூஸ்டர் தடுப்பூசி திட்டம் தொடக்கம்
முகக்கவசம் நம்மைப் பாதுகாக்கும் என்ற நிலையை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
முதலமைச்சர், நாளை ஜனவரி 10ஆம் தேதியன்று பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கி வைக்கின்றார். அதில், 4 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்குத் தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
முன் களப்பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள், 60 வயது கடந்த இதய நோய் உள்ளவர்கள் ஆகியோர் தகுதியானவர்கள் மற்றும் 4 லட்சம் பேர் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு முன் தடுப்பூசி செலுத்தி 9 மாதம் கடந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
15 மண்டலங்களில் மருத்துவ ஆலோசனைக் குழுவினர் தயார்
ஏற்கெனவே, 15 முதல் 18 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கி 33 லட்சத்து 46 ஆயிரம் பேருக்குப் போட வேண்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஒரே வாரத்தில் 22.5 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அறிகுறி இல்லாத நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகளில் சேர்த்து, அதிக நோயாளிகள் உள்ளதுபோல் காட்டிக் கொள்ள வேண்டாம். அவ்வாறு செய்யும் தனியார் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 15 மண்டலத்திலும் மருத்துவ ஆலோசனைக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு நோய் பாதித்தவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்; மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையின் பேரில் ஊரடங்கு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.
பொருளாதார நெருக்கடிக்கு மக்களைத் தள்ளும் நோக்கமில்லை
ஊரடங்கை மக்கள் மீது சுமத்தி, பொருளாதார நெருக்கடிக்கு மக்களைத் தள்ளக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாகவுள்ளார். தமிழ்நாட்டில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 7% மட்டுமே நிரம்பியுள்ளது’ என்றார்.
சென்னையில் ஒரு நாளுக்கு 8 ஆயிரம் நபர்கள் அபராதம் கட்டுகின்றனர்
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசும்போது, 'சென்னையில் பொதுமக்கள் முறையாக முகக்கவசம் அணிவதில்லை.
தொடர்ந்து கண்காணித்து மாநகராட்சியும் காவல் துறையும் அபராதம் விதித்து வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 8 ஆயிரம் நபர்கள் மீதுஅபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 15 ஆயிரம் பேர் சென்னையில் கரோனா தொற்றால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’ என்றார்.
மக்கள் அச்சம் கொள்ளவேண்டாம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, 'தனிமைப்படுத்தப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களுடன் நேரடித்தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் .
தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. 7 விழுக்காடு மட்டும் படுக்கைகள் நிரம்பி உள்ளன.
முதல் மற்றும் 2ஆவது அலையைப் போல் இந்தத் தொற்று அதிகரித்தாலும், அதே வேகத்தில் குறையும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரியார் சிலை அவமதிப்பு - கோவையில் பரபரப்பு