தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நரைத்த நதியில் வாலிபத்தை வாழவைக்கும் வாலி! - ரஜினி

எந்த வெளிநாட்டுக்கும் செல்லாத வாலியால், நியூயார்க் நகரம் உறங்கும் நேரத்தை பாடல் மூலம் எழுப்ப முடியும், வட அமெரிக்காவில் பிறக்கும் மிஸிஸிப்பி நதியை தமிழில் கலக்க முடியும். உசைன் போல்ட்டை தமிழ் பாடல் ரேஸில் நிறுத்தவும் முடியும்

நரைத்த நதியில் வாலிபத்தை வாழவைக்கும் வாலி!
நரைத்த நதியில் வாலிபத்தை வாழவைக்கும் வாலி!

By

Published : Jul 18, 2021, 7:10 AM IST

பாடலாசிரியர்கள் பொதுவாக ஒரு தலைமுறைக்கு எழுதுவார்கள், மிஞ்சிப் போனால் இரண்டு தலைமுறைகளுக்கு எழுதுவார்கள். ஆனால், வாலியோ எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய், சிம்பு-தனுஷ், விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயன் என ஐந்து தலைமுறை நடிகர்களுக்கும் பாடல்களை எழுதியிருக்கிறார்.

நட்பு, காதல், கொண்டாட்டம், தத்துவம், வெற்றி, தோல்வி என நமது வாழ்க்கையில் எது வந்தாலும் அங்கு தவறாமல் வெற்றிலைப் பெட்டியோடு வந்து அமர்ந்து கொள்வார் வாலி.

எண்ணற்ற மர்மங்கள் நிறைந்த கடலுக்குள் சென்று மர்மமாகவேபோன உயிர்கள் ஏராளம். மீன்பிடிக்கச் செல்லும் மனிதர்களை சுற்றிலும் நீர் சூழ்ந்திருந்தாலும், அவர்களுக்கு குடிநீர் தருபவர் யார் என்று எவராவது யோசித்திருக்கிறோமா? அப்படி யோசிக்க வைத்தது "தரைமேல் பிறக்க வைத்தான்" பாடல்.

”கடல் நீர் நடுவே பயணம் போனால்

குடிநீர் தருபவர் யாரோ

தனியாய் வந்தோர் துணிவைத் தவிர

துணையாய் வருபவர் யாரோ?” எனக்கேட்டு நமது யோசனைக்கு விதை போட்டவர் வாலி. அவர்களுக்கு யார் துணை என்று முதன்முதலில் கேள்வி கேட்டவர் வாலி.

எம்ஜிஆருடன் வாலி

வாலியோ தீவிர ஆத்திகவாதி. தமிழ்நாடோ பெரியார் மண். பகுத்தறிவு மண்ணில் முருகனுக்கு ஒரு பாடல் எழுத வேண்டுமென வாலியிடம் சென்றபோது...“கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

கந்தனே உனை மறவேன்”-என அவர் எழுதியதை சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. ஏனெனில் சூழலுக்கோ, மெட்டுக்கோ வார்த்தைகளை கோர்ப்பது சாதாரண பாடலாசிரியர்களுக்கு கைவந்த கலை. ஆனால், பாடல் எழுதும் இடத்தின் நிகழ்கால சூழல்களை பாடலில் வைத்து அவர்களது மனங்களும் நோகாமல், தனது கொள்கையும் தேயாமல் எழுத வாலியால் மட்டும்தான் முடியும்.

திராவிட இயக்கங்களோடு நெருங்கிய தொடர்பிலிருந்த வாலி அவர்களது நட்பையும் கெடுத்துக்கொள்ளக்கூடாது, தனது எண்ணத்தையும் மாற்றிக்கொள்ளக்கூடாது என நினைத்து, “உன்னை கற்பனை, கற்சிலை என்று சொல்பவர்கள் சொல்லட்டும் அது அவர்களது உரிமை. ஆனால் உன்னை மறக்காமல் இருப்பது எனது கடமை” என பாடலின் ஆரம்பத்தில் வைத்து இரு தரப்பையும் பேலன்ஸ் செய்தவர் அவர்.

எம்எஸ் விஸ்வநாதனுடன் வாலி

தளபதி படத்தில், “ராக்கம்மா கையத் தட்டு” போல் ஒரு கொண்டாட்ட பாடல் இனியும் வருமா என்பது சந்தேகமே. இளையராஜாவும், வாலியும் போட்டிப்போட்டு அந்த பாடலில் வேலை செய்திருப்பார்கள். பாடலின் பல்லவியை ராக்கம்மா கையத் தட்டு என்று பேச்சுவழக்கில் ஆரம்பித்து, சரணத்திலும் அதே வழக்கில் பயணப்பட்டு பாடலின் இறுதியில், ”குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்” என்று நடராஜர் குறித்து திருநாவுக்கரசர் எழுதிய வரிகளை வைத்திருப்பார். காதல் தெய்வத்தன்மையுடையது என்று காதலியை நடராஜரோடு ஒப்பிடுகிறார் வாலி.

இளையராஜாவுடன் வாலி

இப்பாடலை இளையராஜா ஃபோக், வெஸ்டர்ன், கிளாசிக்கல் என்று புதிய முறையில் மெட்டமைத்திருப்பார். அந்த விஷயத்தை வாலி அதே பாடலின் ஆரம்பத்தில் இப்படி சொல்லியிருக்கிறார், “ராக்கம்மா கையத் தட்டு புது ராகத்தில் மெட்டுக் கட்டு”. இந்த பாடலின் ஒட்டுமொத்த தன்மையை ஒரே வரியில் வைத்தவர் வாலி. அவரால் படத்தின் கதையையும், பாடலின் முறையையும் ஒரே பாடலில் சொல்ல முடியும்.

ரஜினியுடன் வாலி

அதேபோல், 'குணா' படத்தில் “கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடலை இசை மறக்காது! தமிழ் சினிமாவில் வெளிவந்த வெகுசில உரையாடல் முறை பாடல்களில் அந்தப் பாடல் முக்கியமானது.தனது பிரியத்தை பிரியத்துக்குரியவர்களிடம் சொல்லாமலிருப்பது பெரும் கொடுமை. அதை எழுத்தில் கடத்திவிட முடியாது. ஆனால், “எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது... எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றென்னும்போது வந்த அழுகை நின்றது... மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல; அதையும் தாண்டி புனிதமானது” என்று வாலி சொல்வதில்தான் எவ்வளவு அழகு!

ஆம், காதலிப்பவருக்காக அழுவது எவ்வளவு சுகமோ, அதைவிட சுகம் நமது சோகம் அவர்களைத் தாக்கும் என எண்ணி அந்த சோகத்தை விழுங்கிக் கொள்வது. அது ஒரு ராஜ சுகம். அனுபவித்தால்தான் புரியும். குறிப்பாக, மனநலம் பிசகியவர்கள் பிறர் மேல் வைக்கும் காதல் எந்தவித அழுக்குமற்றது. அந்த அப்பழுக்கற்ற புனிதத்தன்மையை திரையிசையில் சொல்லியவர் வாலி.

மகாநதியில் அவர் எழுதிய “எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்” என்ற பாடலில்.”நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது

அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது

சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது

இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது”என்று அவர் எழுதிய வரிகளில் ஒட்டுமொத்தமாக மகாநதியின் கதையும் இருக்கிறது! இந்த பொல்லாத மனிதர்களின் கதையும் இருக்கறது.ஆம், சக மனிதர்களைக் கெடுப்பதற்கும் வீழ்த்துவதற்கும்தானே இங்கே வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பாவ வேலைகளைச் செய்துவிட்டு மனிதர்கள் எந்தவித சஞ்சலமுமின்றி புனித நதிகளை நோக்கி நகர்ந்துவிடுகிறார்கள். வாலி சொல்லியதுபோல் இங்கு மனநலம் பிசகியவர்களின் காதல் புனிதத்தன்மையானது. ஆனால், மனநலம் சரியாக இருக்கும் மனிதர்களால் புனிதம் கலங்குகிறது. வாலியால் மனிதர்களின் குரூரத்தை ஓரிரு வரிகளில் வீதியில் நிறுத்திவிட முடியும்.

கமலுடன் கவிஞர் வாலி

வாலி காதலை அணுகும் முறையே வித்தியாசமானது. காதல் புனிதமானது என்று அனைவரும் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் வாலி வந்து பிராக்டிக்கலான காதலை தமிழின் காதில் சொல்லிவைத்தார்.தற்போதைய காலம் கம்ப்யூட்டர்களால் ஆனது. பல காதல்களுக்கு கம்ப்யூட்டர்கள் தொடக்க விழா நடத்துகின்றன. மூடுவிழாவும் நடத்துகின்றன. “ஓ மரியா” பாடலில், வாலி இப்படி ஒரு வரி எழுதியிருக்கிறார், “கம்ப்யூட்டரில் காதல் செய்யும் காலம் இனி”. தற்போதைய காதல் உருவாகும் தருணத்தை அவர் 1999ஆம் ஆண்டே சொல்லிவிட்டார். அவர் ஒரு தீர்க்கதரிசி.

காதலிக்குக் கொடுக்கக்கூடிய விலைகளில் உயர்ந்தது என்றுமே உயிர்தான். அதுவும் காதலியின் அழகை விலை என்னவென்று கேட்க எந்த கவிஞனும் துணிய மாட்டான். என்ன விலை அழகே என்று கேட்டுவிட்டு அடுத்த வரி சிறிது பிசகினாலும் அது காதல் பாட்டாக அர்த்தம் பெறாது. ஆனால், காதலியின் அழகை என்ன விலை என்று கேட்டுவிட்டு அதற்கு விலை உயிரென்றாலும் தருவேன் என எழுதிய வாலியைக் கண்டு காதலர்கள் தலை வணங்குவார்கள்.

”உடையென எடுத்து எனை உடுத்து

நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா”என்ற வரிகளில் எவ்வளவு காதல் வழிந்தோடுகிறது. காதலியின் நூலாடையைவிட காதலன் மென்மையானவனாக இருக்க வேண்டும் என்று பாடம் எடுத்திருக்கிறார் அவர். காதலியின் இடையைப் பார்த்து பிரம்மன் கஞ்சன் என்று சொன்னவரில்லை அவர், நூலகம் என்று சொன்னவர்.

நீதான் எனக்கு எல்லாம், உன்னைத் தவிர யாருக்கும் என மனதில் இடமில்லை என்ற கருவை வைத்து கவிதைகளும், பாடல்களும் அதிகளவில் வந்துவிட்டன. ஆனால், அதை வேறு மாதிரி சொல்வதில்தான் ஒரு பாடலாசிரியரின் வெற்றியும், அவர் காதல் மீது கொண்ட வெறியும் இருக்கிறது.

வாலி அதனை ”என்னுடைய காதலிய, ரொம்ப ரொம்ப பத்திரமா

எண்ணம் எங்கும் ஒட்டி வச்சேன் வண்ண வண்ண சித்திரமா

வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா” என்று தான் எழுதிய அனைத்து காதல் பாடல்களிலும் வேறு முறையை கையாண்டிருப்பார்.வாழ்க்கையை வாழ்வது அழகென்றால், வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருப்பது அழகு என்று உரைத்தவர். ஓடுதல் என்றால் நாட்களையும் வாழ்வையும் கொல்லும் வகையில் இயந்திரம் போல் ஓடுவது அல்ல. குளம்போல் தேங்கி நின்றால் பாசி பிடித்துவிடுவோம் என்பதை உணர்த்தி, புதிய பாதை அமைத்து, செல்லும் வழியெங்கும் செழிக்க வைத்து ஓடும் “நதிபோலே ஓடிக்கொண்டு இரு” எனச் சொன்னவர்.

நரைத்த நதியில் வாலிபத்தை வாழவைக்கும் வாலி!

பாஸ்போர்ட்டே இல்லா கவிஞர் அவர். எந்த வெளிநாட்டுக்கும் செல்லாத வாலியால், நியூயார்க் நகரம் உறங்கும் நேரத்தை பாடல் மூலம் எழுப்ப முடியும், வட அமெரிக்காவில் பிறக்கும் மிஸிஸிப்பி நதியை தமிழில் கலக்க முடியும். உசைன் போல்ட்டை தமிழ் பாடல் ரேஸில் நிறுத்தவும் முடியும். ட்ரெண்டிங், அப்டேட் என்ற வார்த்தைகளுக்கு வாலி முழு அகராதி. வாழும் காலம்வரை தன்னை அவர் அப்டேட் செய்துகொண்டே இருந்தவர். வாலியைப் பொறுத்தவரை, மெட்டுக்கு எழுதும்போது மெட்டுக்கவிஞன் பிறக்க வேண்டும், ஏட்டுக் கவிஞன் பிறக்கக் கூடாது என்பதில் கடைசிவரை தெளிவாக வாழ்ந்தவர்.இளைஞர்களுக்கு மட்டும்தான் காதல் வருமா, அந்த வயதுகளில் மட்டும்தான் காதல் உயிரோடு இருக்குமா. இல்லை; காதல் உண்மையென்றால் கிழப்பருவம் எய்தினாலும் காதல் இளமையோடு ஊஞ்சலாடும் என்று உணர்த்தியவர் வாலி மட்டுமே.

பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில் அவர் எழுதிய “உனக்காக பொறந்தேனே எனதழகா” பாடல் இன்றுவரை நமது தந்தை தாயுக்குமான டூயட் பாடல். அந்தப் பாடலில், “ நீ முத்திப்போன கத்திரியா புத்தம்புது பிஞ்சு" என ஆண் பாட, "நான் முந்தாநாளு ஆளானதா எண்ணுதோ உன் நெஞ்சு” என அவர் எழுதிய வரிகள் சொல்லும்-ஒருவன் தனது மனைவியை கடைசிவரை எப்படி காதலிக்க வேண்டுமென்று. அந்த இரண்டு வரிகளில் எவ்வளவு காதல், சிணுங்கல், கிண்டல்கள் ஒளிந்திருக்கின்றன. அவரது பாடல்களில் கிண்டல் எந்தளவு இருக்கிறதோ அந்தளவுக்கு ஆழமும் இருக்கும். அவரால் வள்ளுவன் தமிழையும் எழுத முடியும், வாலிபத் தமிழையும் எழுத முடியும்.வாலிபக் கவிஞர் என்ற பட்டத்தை அவர் அவ்வளவு எளிதாக வாங்கிவிடவில்லை. இளைஞர்களுக்கு காதல் பாடலையும், முதியோர்களுக்கான காதல் பாடலையும் யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் வயதானவர்களுக்கு காதல் பாடல் எழுதும்போது அந்த பாடலில், அவர்களது இளைமைக்காலத்தில் காதல் எப்படி வாழ்ந்ததோ அந்தக் காதலை மீண்டும் நரைத்த நதியிலும் வாழ வைக்க வேண்டும். அதை வாலி தவறாமல் செய்தவர். அவரால் மட்டுமே பல நரைத்த நதிகளில் வாலிபம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

கவிஞர் வாலியின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் அவரின் வரிகள் என்றும் தமிழர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும்.

இந்த கட்டுரை ஏற்கனவே வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details