சென்னைவிமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக கடந்த அக்டோபர் மாதம், இலங்கை நாட்டைச் சேர்ந்த லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ என்பவர் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அவருக்கு உடந்தையாக இருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த கென்னிஸ்டன் பெர்னான்டோ, தர்மேந்திரன், ஜான்சன் சாமுவேல் மற்றும் சென்னையைச் சேர்ந்த மோகன், பாஸ்கரன் ஆகியோர், தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இலங்கைப்பெண் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்டி, பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் அனுப்பி வந்ததும், கடந்த 2018ஆம் ஆண்டு போலி பாஸ்போர்ட் மூலமாக சென்னைக்கு வந்து, அண்ணா நகரில் வாடகை எடுத்து தங்கி ஆதார் கார்டு, கேஸ் இணைப்பு போன்ற ஆவணங்கள் வாங்கி, அதன் மூலமாக சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு இருப்பதால், இந்த வழக்கானது தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.