சென்னை லயோலா கல்லூரியில், லயோலா மேம்பாட்டு அலுவலகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் உள்ளது. இதை நிர்வகிக்க கடந்த 2010 ஆம் ஆண்டு பெண் ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் முன்னாள் மாணவர் சங்கத்துக்கு வந்த 1 கோடி ரூபாயை, அப்போதைய இயக்குநர் முறைகேடாக பயன்படுத்தியதை கண்டுபிடித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கு பெண் ஊழியர் புகார் அளித்தார். ஆனால், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், அப்பெண் ஊழியரை இடைநீக்கம் செய்ததுடன், ஊதியமும் நிறுத்தப்பட்டது.
மேலும், பெண் ஊழியரின் கல்விச் சான்றிதழை தராமல் அலைக்கழித்ததுடன், பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தை மாநில மகளிர் ஆணையம் தாமாகவே முன் வந்து விசாரணைக்கை எடுத்தது. ஆணையத்தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தலைமையிலான குழு, கடந்த நவம்பர் மாதம் கல்லூரி நிர்வாகத்திடமும், டிசம்பர் 15 ஆம் தேதி கல்லூரியிலும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், ஊழியர் மீது எந்தத் தவறும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.