சென்னை:அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் நீட் தேர்வினை எழுதுவதற்கு அரிதாகவே விண்ணப்பித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சரியான முறையில் பயிற்சி அளிக்கப்படாததால், விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளின் மாணவர்கள் சேர்வதற்கான தேசிய நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் எனவும், இதற்காக ஜூலை 13ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தேசியத் தேர்வு முகமை அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதுவதற்கு அவர்கள் படித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.
குறைவான மாணவர்கள் விண்ணப்பம்
இந்நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி வரையில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆறாயிரத்து 412 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பம் செய்வதற்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 505 பேரும், மிகக் குறைவாக திருப்பூர் மாவட்டத்தில் 11 பேரும் விண்ணப்பித்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் 133 மாணவர்களும், செங்கல்பட்டில் 86 மாணவர்களும், திருவள்ளுரில் 499 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். அவற்றிலும் ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியின மாணவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருப்பது தெரியவந்துள்ளது.
ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆயிரத்து 850 பேர், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 129 பேர், பழங்குடியின மாணவர்கள் வெறும் 95 பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பது தெரிய வந்துள்ளது. மீதம் இருக்கக்கூடிய நான்காயிரத்து 338 மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினராக இருக்கின்றனர்.
பழங்குடியின மாணவர்களைப் பொருத்தவரை; அரியலூர், சென்னை, திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 16 மாவட்டங்களில் ஒரு மாணவர் கூட விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்த மாணவர்களின் விழுக்காடு விவரம்
- மொத்தம் - ஆறாயிரத்து 412 பேர்
- பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட உள்ளிட்ட மாணவர்கள் எண்ணிக்கை
நான்காயிரத்து 338 பேர் (67 விழுக்காடு) - ஆதிதிராவிடர் மாணவர்கள் ஆயிரத்து 850 பேர் (28 விழுக்காடு)
- அருந்ததியர் பிரிவு மாணவர்கள் 129 (2.01 விழுக்காடு)
- பழங்குடியின மாணவர்கள் 95 (1.4 விழுக்காடு)