பெங்களூரு காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறையினருக்கு நேற்று, கடிதம் ஒன்று எழுதியிருந்தனர். அதில், சுந்தரமூர்த்தி என்ற லாரி ஓட்டுநர் பெங்களூரு காவல்துறைக்கு தொலைபேசியில் பேசியதாக கூறியுள்ளனர்.
அப்போது, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் முக்கிய நகரங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த இருக்கின்றனர் என கூறினார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்கள் என அவர் கூறியிருக்கிறார். எனவே, தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர் என சுந்தரமூர்த்தி கூறியது வதந்தி என தெரியவந்தது. இதனையடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
65 வயதான சுந்தர மூர்த்தி முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் வதந்தி பரப்பியது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.