சென்னை:திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முருகன் என்பவரை சமயபுரம் காவல் துறையினர் கைது செய்து லாட்ஜில் அடைத்து வைத்திருந்தனர். 2019ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி கைது செய்யப்பட்ட முருகன், 15ஆம் தேதி மரணமடைந்தார்.
காவல் துறையினர் தாக்கியதால் தான் அவர் இறந்ததாகப் புகார் கூறி, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுசம்பந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதேபோல திருவெறும்பூரைச் சேர்ந்த ரத்தினம் என்பவரும் புகார் அனுப்பியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் துரை. ஜெயச்சந்திரன், திருச்சி நடுவர் நீதிமன்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையில் இருந்தும், மனித உரிமைகள் ஆணைய புலன் விசாரணை பிரிவு விசாரணை அறிக்கையில் இருந்தும் முருகனை காவல் துறையினர் தாக்கியதால் தான் இறந்திருக்கிறார் என்பது நிரூபணமாகியுள்ளதாகக் கூறி, முருகனின் மனைவி சரசுவிற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலைய அப்போதைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார், சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மதன் ஆகிய இருவரிடம் இருந்தும் தலா 2 லட்சம் ரூபாயும்; லால்குடி காவல் நிலைய அப்போதைய ஏட்டு விஜயகுமார், சிறுகானூர் காவல் நிலைய அப்போதைய காவலர் நல்லேந்திரன், கொள்ளிடம் காவல் நிலைய அப்போதைய காவலர் ரகுமான், திருச்சி சிபிசிஐடி ஏட்டு சரவணகுமார் ஆகிய நான்கு காவல் துறையினரிடம் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாயும் வசூலிக்க அரசுக்கு உத்தரவிட்ட ஆணையம், இவர்கள் ஆறு பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளது.
இதையும் படிங்க:வேலூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வாக்குவாதம்