கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மீறிய இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
ஊரடங்கை மீறிய மக்கள்! உத்வேகம் காட்டும் காவல்துறை! ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்து 33 நாள்கள் ஆன நிலையில் தமிழ்நாடு காவல் துறை இதுவரை 3 லட்சத்து 6 ஆயிரத்து 339 வழக்குகள் பதிவு செய்துள்ளது. தடையை மீறியதாக மூன்று லட்சத்து 24 ஆயிரத்து 269 பேரை காவல் துறை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது.
மேலும், இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 183 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை அபராதமாக மூன்று கோடியே 27 லட்சத்து 33 ஆயிரத்து 714 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அபராத தொகை மூன்று கோடி ரூபாய்யை நெருங்கவுள்ளது.