இந்தியா மிகப்பெரிய ஜனநாயக ஒன்றியம். இங்கு பல்வேறு மொழிகள் பேசும், கலாசாரம், உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். குறிப்பாக கிராமங்கள் மிக அதிகம். அதனால்தான் இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்றார் மகாத்மா காந்தி. அந்த முதுகெலும்பு வளையாமல், உடைந்து போகாமல் இருக்க 73ஆவது அரசியல் சாசன சட்டத்திருத்தம் உதவியது. ஆம் அதன் மூலம் பஞ்சாயத்து ராஜ் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த உள்ளாட்சி தேர்தல் மூலம் கிராமங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படுகிறது. முக்கியமாக மக்களாட்சி என்று கூறப்படும் இந்தியாவில் உண்மையாகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருக்கின்றனர்.
தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகளில் மாநகராட்சி மன்றங்களுக்கான மேயர் (தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் தேர்தல் மறைமுகமாக நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது) மற்றும் இம்மாநகராட்சிப் பகுதிகளின் உறுப்பினர்கள் (வார்டு உறுப்பினர்கள்), நகராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள் மற்றும் இந்நகராட்சிகளிலுள்ள நகராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள் மற்றும் இப்பேரூராட்சிகளிலுள்ள பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள் மற்றும் இம்மாவட்டத்திலுள்ள மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய மன்றங்களுக்கான தலைவர்கள் மற்றும் இந்த ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
ஊராட்சி நிர்வாகம் தனி நபரோ, இல்லை குழுக்களின் கட்டுப்பாட்டிலோ செயல்படாமல் சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு செயல்படும். இதன் மூலம் தங்களது கிராம வளர்ச்சிக்கு மக்களே நேரடியாக பங்காற்ற முடியும் என்பது இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மிக முக்கியமாக, இந்த நேரத்திலிருந்து இந்த நேரம் வரைதான் இயங்க வேண்டும் என்ற வரையறை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கிடையாது. ஏனெனில் இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படும் மக்கள் நிர்வாகம். எனவே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்படுவதற்கு அதிகாரம் உண்டு. ஒரு ஊராட்சியை அமைக்க 3,000 பேர் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் இருக்கும் கிராம நிர்வாக அலுவலகம் (வி.ஏ.ஓ., இவர் வருவாய்த் துறையின் ஊழியர்) ஊராட்சி கேட்டால் தேவையான தரவுகளைக் கொடுக்க வேண்டும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.