வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (செப். 21) செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி வேலூர் மாவட்டத்திலுள்ள 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 13 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. இது தவிர வேலூர் மாவட்டத்திலுள்ள ஏழு ஒன்றியங்களில் 138 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்கள் உள்ளன.
இதில் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒன்றும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒன்று என 6 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளரின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “எதிர்க்கட்சியாக இருந்தபோது பெருவாரியான வெற்றியைப் பெற்றோம். இப்போது உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்.