மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் 62 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஆயிரத்து 324 ஊராட்சித் தலைவர்கள், 10 ஆயிரத்து 329 ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
இத்தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்கின்றனர். இதற்காக ஆறாயிரத்து 652 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
அக்டோபர் 6இல் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடக்கிறது. மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், கரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்குள் இறுதிநேரத்தில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் வரும் நிலையில், அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.