இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்கள் 2021 மற்றும் 28 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலவிடப்பட்ட தொகைக்கான கணக்கினை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு பராமரிக்கப்பட்ட கணக்கின் உண்மை நகலினை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முப்பது நாள்களுக்குள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மாவட்ட ஊராட்சி செயலரிடமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் தாக்கல்செய்ய வேண்டும்.