தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 8, 2022, 4:00 PM IST

Updated : Jun 8, 2022, 5:42 PM IST

ETV Bharat / city

தொடக்கக் கல்வித்துறையில் 9000 ஆசிரியர் பணியிடங்கள் காலி!

தொடக்கக் கல்வித்துறையில் 9000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் வட மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

anganwadi
anganwadi

சென்னை: தொடக்கக் கல்வி இயக்ககம் அளித்துள்ள அறிக்கையில், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் 22,831 அரசு தொடக்கப் பள்ளிகள் 6,587 அரசு நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இப்பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வி ஆண்டில் 23 லட்சத்து 40 ஆயிரத்து 656 மாணவர்கள் பயில்கின்றனர். 69,640 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சித் திட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகள் 5 வயது நிரம்பிய பின்னர் அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்க்கப்படுவர்.

2019-2020ஆம் கல்வியாண்டில் 52,933 மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்கள் கண்டறியப்பட்டு , அம்மையங்களில் LK.G மற்றும் U.K.G வகுப்புகள் சோதனை முறையில் துவங்கப்பட்டன.

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர்கள் மாற்றுப் பணி மற்றும் பணி மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டனர். LK.G மற்றும் U.K.G ஆகிய இரண்டு வகுப்புகளையும் ஒரு சேர ஒரே ஆசிரியர் கையாளும் வகையில் பணியமர்த்தப்பட்டனர் .
அங்கன்வாடி மையங்களில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் ( ICDS ) துறையால் , மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டன.

எல்கேஜி ,யுகேஜி வகுப்புகளையும் கையாள நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மட்டுமே பெற்றவர்கள் ஆவார். மழலையர் வகுப்புகளில் பயிலும் குழந்தைகளை கையாள்வதில் சிக்கல்களும் புரிதல் இன்மையும் நீடித்து அவ்வகுப்புகளை செம்மையாக கையாளும் நிலை இல்லாத சூழ்நிலையே காணப்பட்டது.
தொடக்கக் கல்வி இயக்ககத்தில் 2013-2014ஆம் கல்வியாண்டிற்கு பிறகு புதியதாக ஆசிரியர்கள் எவரும் நியமிக்கப்படாததால் ,போதிய ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்களுக்கு சரியான முறையில் அடிப்படைக் கல்வி போதிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு அதன் விளைவாக மாணவர்களின் கல்வித் தரம் வெகுவாக குறைந்தது .
இதன் விளைவாக 2019-2020 ம் கல்வி ஆண்டிற்கான மத்திய அரசின் அறிக்கையில், தமிழ்நாடு , கற்றல் விளைவுகளில் 22 ஆம் இடத்தினை அடைந்தது. மேலும் , சமீபத்தில் வெளிவந்த தேசிய அளவிலான அடைவு சோதனை ( NAS ) முடிவுகளில் தமிழ்நாடு 27 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2013-2014ஆம் கல்வியாண்டு முதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில் இந்த கல்வியாண்டின் இறுதியில் தொடக்க வகுப்புகளை கையாளும் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களில் 4863 காலிப் பணியிடம் உருவானது. இதனால் 3,800 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளைக் கையாள ஒரே ஒரு ஆசிரியர் தான் உள்ளார்.

இந்த ஓராசிரியர் பள்ளிகளில் பெரும்பாலானவை தர்மபுரி , கிருஷ்ணகிரி , சேலம் , திருவண்ணாமலை , வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் , கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய வட மாவட்டங்களிலேயே உள்ளது . இதனாலேயே இந்த வட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக தமிழகத்தில் இருந்து வருகின்றன.
2021 மே மாதத்திற்குப் பிறகு கரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு , பள்ளிகள் பாதுகாப்பாக திறக்கப்பட்டப் பின்னர் அரசுப் பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேல் புதிதாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 1 முதல் 5 வகுப்புகளில் மட்டும் 2.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளின் மேல் நம்பிக்கை வைத்து கூடுதலாக சேர்ந்துள்ளனர் .

இப்படி கூடுதலாக சேர்ந்த மாணவர்களுக்கு 1 ஆசிரியருக்கு 40 மாணவர்கள் என்ற விகிதத்தில் சுமார் 4,500 க்கும் மேற்பட்ட கூடுதல் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் தேவைப்படுகின்றது . ஏற்கனவே உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் கூடுதல் மாணவர் சேர்க்கையால் தேவைப்படும் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 9,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டு தொடக்கக் கல்வியின் தரம் குறைய வாய்ப்பு அதிகமானது .
தமிழ்நாட்டில் "எண்ணும் எழுத்தும்" திட்டம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே இருந்த குழந்தைகளுக்கு முந்தைய நடைமுறையைப் பின்பற்றி இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் அங்கன்வாடி உதவியாளர்கள் மூலம் தற்காலிகமாக கற்றல் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விமான போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு.. விவரம் உள்ளே...!

Last Updated : Jun 8, 2022, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details