சென்னை:தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. மது வகைகள் மீதான ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.
அரசுக்கு எப்போதும் லாபம் ஈட்டும் நிறுவனமாக இருக்கும் டாஸ்மாக் கடைகள் கரோனா காலகட்டத்தில் சில நாள்கள் மூடப்பட்டதால் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
மதுபானங்கள் விலை உயர்வு
தற்போது காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை மது விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தி இருப்பதால் தற்போது அறிவித்துள்ளது.
கடந்த மே மாதத்தில் சாதாரண வகை மது பாட்டிலின் விலை 10 ரூபாயும், ப்ரீமியம் வகை மது பாட்டிலில் விலை 20 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வெளிநாட்டு மதுபானங்களின் குறைந்த ரக விலை 10 ரூபாயும், நடுத்தர மதுபானங்கள் விலை 300 ரூபாயும், உயர் ரக மதுபானங்களின் விலை 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிர்ச்சியில் மது பிரியர்கள்
இந்த விலை உயர்வு இன்று (செப்.01) முதல் அமலுக்கு வந்துள்ளது. டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாது மொத்த விற்பனை செய்யப்படும் இடங்களிலும் இந்த விலை உயர்வு அமலாகியுள்ளதால் தனியார் பார், கிளப்புகளில் மதுபானங்களின் விலை பன்மடங்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பின் காரணமாக மது பிரியர்கள் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் இருந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:டாஸ்மாக் கடையில் ரூ.46 லட்சம் கையாடல் - மேற்பார்வையாளர் கைது