சென்னை:வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விதித்து, அதன்பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என்று டாஸ்மாக் நிர்வாகத்திற்கு யோசனை அளித்தது.
அத்துடன் பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க இதுசம்பந்தமாக திட்டம் வகுக்க வேண்டும், தவறினால் மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று நீதிமன்றம் எச்சரித்தது.
இந்த வழக்கு நேற்று (ஏப். 25) நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் அமல்படுத்த அரசு ஒப்புதல் அளித்ததாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.