சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா தொற்று பாதிப்பால் 3 சிங்கங்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 5 சிங்கங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள், புலிகள் காப்பகங்களில் உள்ள சிறுத்தை, புலி, யானைகள் போன்ற விலங்குகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனவா என கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி 1,485 சதுர கிமீ பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வாழும் காட்டு விலங்குகளை கண்காணிக்க, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் கிருபா சங்கர் தலைமையில் கால்நடை மருத்துவர், உதவி வனப்பாதுகாவலர், வனச்சரக அலுவலர், வனவர், வனக்காப்பாளர் என ஆறு பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.