சென்னை:சென்னையைச் சேர்ந்த மதி என்பவர் தனது மனைவி "தேசம்", மகன்கள் மற்றும் மகளுடன் காசிமேட்டில் வசித்து வந்தார். மது அருந்தும் பழக்கம் கொண்ட மதி, தனது மனைவிடம் அடிக்கடி பணம் கேட்டுத் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு மதி தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு, தர மறுத்ததால் ஆத்திரமடைந்து அவரை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். இதில் மனைவி உயிரிழந்துவிட்டார்.
இதனையடுத்து, கொலை வழக்கு உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் கணவர் மதி மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதன் மீதான விசாரணை சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி முகமது ஃப்ரூக் முன்பு நடைபெற்றது. விசாரணை முடிந்து நீதிபதி அளித்துள்ள தீர்ப்பில், மதி மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கணவர் மதிக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன், 15,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார். இந்த அபராதத் தொகையில் மூன்று பிள்ளைகளுக்கும் தலா நான்காயிரம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் நீதிபதி முகமது ஃப்ரூக் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'சமூக ஆர்வலர்கள் பெயரை ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்குங்கள்' - பூங்கொத்து கொடுத்து கோரிக்கை வைத்த விவசாயிகள்