இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், “வணக்கம்! தமிழ்நாட்டில் இந்த வருடம் ஜனவரி 26 இல் கிராமசபை நடந்தது. கடந்த மார்ச் 24, 2020 முதல் ஊரடங்கு நடைமுறையிலிருப்பதால், மே 1 மற்றும் ஆகஸ்ட் 15 தேதிகளில் நடக்க இருந்த இரு கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 8 மாத கால இடைவெளிக்குப் பிறகு, அக்டோபர் 02 காந்தி ஜெயந்தி கிராமசபைக்கான அறிவிப்பு 26.09.2020 அன்று வெளியிடப்பட்டது.
நம் மாவட்டத்தில் பல ஊராட்சிகளில், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொது மக்கள், இந்த கிராமசபையை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். ஆனால், எவரும் எதிர்பாராத வகையில் அக்டோபர் 01 இரவு, கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
கரோனா சூழலிலும், கடந்த செப்டம்பர் மாதம், நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. அதேபோல சட்டமன்றக் கூட்டமும் தமிழகத்தில் நடந்துள்ளது. கொரோனா சூழலில் சட்டங்கள் இயற்றவும், முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் எந்த அளவிற்கு நாடாளுமன்ற கூட்டமும், சட்டமன்றக் கூட்டமும் மிக அவசியமோ, அதே அளவிற்கு, கிராமசபையைக் கூட்டுவதும் அவசியமே.
மேலும் சட்ட மற்றும் நிர்வாக ரீதியிலான இரண்டு முக்கிய விஷயங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
1. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3(2) இன் படி, கிராமசபை ஒரு ஆண்டில் குறைந்தது இரண்டு முறையாவது கூட வேண்டும். மேலும், இரண்டு கூட்டங்களுக்கு இடையே ஆறு மாதங்களுக்கு மேல் கால இடைவெளி இருக்கக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2. மத்திய ஊரக வளர்ச்சித் துறை, 24.09.2020 அன்று தமிழகம் உட்பட அனைத்து மாநில கூடுதல் தலைமை செயலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்கவும், வருகின்ற நிதியாண்டில் தேசிய ஊராக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் தொடர்பான அனைத்து பணிகளுக்கான முடிவுகளை எடுக்கவும், அக்டோபர் 02 கிராமசபையையும், அக்டோபர் 03 முதல் நவம்பர் 30க்குள் ஒரு சிறப்புக் கிராமசபையினையும் கட்டாயம் கூட்ட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் சுய நிதானம் இழந்து, சமூக இடைவெளி சற்றும் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்படுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று கொண்டிருக்கும் போது, ஜனநாயகத்தின் ஆணிவேராக இருக்கிற, கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச் சூழலையும் சுகாதாரத்தையும் உறுதி செய்யக்கூடியக் களமாக இருக்கக்கூடிய, கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற அடிப்படையிலும், மாவட்ட அளவில் ஊரடங்கு குறித்து முடிவெடுக்கும் அதிகாரி என்ற அடிப்படையிலும், தாங்கள் போதிய பாதுகாப்பு நெறிமுறைகளை அறிவித்து, உடனடியாக கிராம சபைக் கூட்டங்களை நம் மாவட்டத்தில் நடத்திட ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.