தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் இணைந்து `கிராம சபை மீட்பு வாரம்' என்பதை நடத்திவருகின்றன. இந்நிலையில், கிராம சபைக் கூட்டத்தை உடனடியாக நடத்த உத்தரவிட வலியுறுத்தி தலைமை செயலளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், ”தமிழ்நாட்டில் இந்த வருடம் ஜனவரி 26ஆம் தேதிக்கு பிறகு மே 1, ஆகஸ்ட் 15 தேதிகளில் நடக்கவிருந்த இரு கிராமசபைக் கூட்டங்கள், கரோனா பெருந்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டன. சுமார் எட்டு மாத கால இடைவெளிக்குப் பிறகு, அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி கிராம சபைக்கான அறிவிப்பு 26.09.2020 அன்று வெளியிடப்பட்டு, பிறகு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
கரோனா சூழலிலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரும் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக் கூட்டமும் நடந்துள்ளன. கரோனா சூழலில் சட்டங்கள் இயற்றவும், முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் எந்த அளவிற்கு நாடாளுமன்றக் கூட்டமும், சட்டப்பேரவைக் கூட்டமும் மிக அவசியமோ, அதே அளவிற்கு, கிராம சபையைக் கூட்டுவதும் அவசியமே.
மக்கள் சுய நிதானம் இழந்து, தகுந்த இடைவெளியை சற்றும் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்படுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ள டாஸ்மாக் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று கொண்டிருக்கும்போது, ஜனநாயகத்தின் ஆணிவேராக இருக்கிற, கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் “சுற்றுச் சூழலையும் சுகாதாரத்தையும் உறுதி செய்யக்கூடியக் களமாக இருக்கக்கூடிய, கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.