தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாலையில் ஒளிரும் எல்.இ.டி. சிக்னல் - கலக்கும் சென்னை போலீஸ்

சென்னை: சாலை விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து விதிகளை பின்பற்றவும் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி அசத்திவருகின்றனர்.

signal

By

Published : Jun 11, 2019, 7:16 PM IST

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாகனங்களின் பெருக்கத்தால் சென்னையில் உள்ள பல்வேறு சாலைகளிலும் போக்குவரத்து இடையூறுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமல்லாது ஒருசில வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றாத காரணத்தினால், தினந்தோறும் பலரும் விபத்தில் சிக்கி உயிரிழப்பதும் தொடர்ந்துவருகிறது.

எனவே, இதனை கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அதி நவீன இ-செலான் இயந்திரம், போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது பொதுமக்கள் புகார் அளிக்கும் செயலி என புதிய தொழில்நுட்பங்களை சமீபத்தில் அறிமுகம் செய்தனர். அந்த வகையில், போக்குவரத்து சிக்னல்களை வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில், "எல்.இ.டி ஸ்டாப் லைன் சிக்னல்" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை சாலையில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி ஸ்டாப் லைன் சிக்னல்

மெரினா காமராஜர் சாலையில், டிஜிபி அலுவலக சிக்னலில் இந்த எல்.இ.டி சிக்னல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ஒளிரும் வகையில் போக்குவரத்து சிக்னலுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த எல்.இ.டி சிக்னல் ஸ்டாப் லைன் எனப்படும் நிறுத்தக்கோட்டில் பதிக்கப்பட்டுள்ளது. சிக்னலுக்கு தகுந்தாற்போல, சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களில் இந்த எல்இடி சிக்னல் ஒளிர்கிறது. சிக்னல் மட்டுமில்லாமல் வேகத்தடையாகவும் இந்த எல்இடி சிக்னல் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

பெரும்பாலான வாகன ஓட்டிகள் சிக்னலை மதிக்காமலும், நிறுத்தக் கோட்டில் நிற்காமலும், சிக்னலை வேகமாகவும் கடப்பதனால் அதிகளவு விபத்துக்கள் நடக்கிறது. எனவே இதை தடுக்கும் பொருட்டே இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த போக்குவரத்து காவல் துறையினர், விரைவில் இதுபோன்ற சிக்னல்கள் சென்னை முழுவதுமுள்ள சிக்னல்களில் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details