தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில், 409 சட்ட பட்டதாரிகள், வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், தமிழ் மொழியின் மீது பற்று கொள்வது என்பது வேறு மொழிகளை புறக்கணிப்பது அல்ல என்றும், வழக்கறிஞர் தொழிலுக்கு ஆங்கிலம் முக்கியம் என்பதால் ஆங்கிலப் புலமையை வழக்கறிஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
முன்னதாக பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், தமிழகத்தில் போலி வழக்கறிஞர்களைத் தடுக்கும் பணிகளை தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் மேற்கொண்டு வருவதாகவும், இதுபோன்ற போலி வழக்கறிஞர்களால், நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய வழக்குகள் காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்துகள் மூலம் தீர்த்து வைக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தார். புதிய வழக்கறிஞர்கள், போலிகளுக்குத் துணை போகாமல் தனித்தன்மையுடன், நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேசும்போது, அதிகமான பெண் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது எனவும், கீழமை நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளே அதிகம் உள்ளதால், இலக்கை நிர்ணயித்து பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.