தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 9, 2022, 11:46 AM IST

ETV Bharat / city

பொது தேர்வு எழுதிய மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு

தமிழ்நாட்டில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர்களில் திருத்தங்கள் செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பாக அரசு தேர்வுத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

கடைசி வாய்ப்பு
கடைசி வாய்ப்பு

சென்னை:அரசு தேர்வுத்துறை நேற்று (ஜூலை 8) தமிழ்நாட்டில் 12, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

அந்த செய்திக்குறிப்பில், “அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் 2021-22 ஆம் கல்வியாண்டில் மே மாதம் நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 2 முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறுதி வாய்ப்பும் அளிக்கப்பட்டது.

இருப்பினும், தற்போது பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டப் பின்னரும், பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு தொலைபேசி, கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று பலமுறை பள்ளி மாணவர்களது பெயர் பட்டியலில் திருத்தங்கள் வழங்க வாய்ப்பு வழங்கினாலும், மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் அதில் திருத்தம் செய்ய கடிதம் பெறப்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது.

இந்தநிலையில் தற்போது பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மேலும் ஒரு இறுதி வாய்ப்பு ஜூலை 8ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெயர் பட்டியலில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

இந்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு, அதில் திருத்தம் கோரி இந்த அலுவலகத்தால் மனுக்கள் பெறப்பட்டால், அரசின் நிதிச் செலவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்படும். எனவே, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பிழையில்லா விவரங்களுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் படிக்க ரூ 2.5 கோடி ஸ்காலர்ஷிப் வென்ற பாட்னா மாணவர் - குவியும் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details