செங்கல்பட்டு:வண்டலூரில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, இம்முகாமில் வேலைவாய்ப்பினை பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 20) வழங்கினார்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் பிற மாவட்ட இளைஞர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றனர்.
இந்நிறுவனங்களால் 73 ஆயிரத்து 950 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் 20 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இம்முகாம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் ஒருங்கிணைப்புடன் உணவு, குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளுடன் நடத்தப்பட்டது. அத்துடன் மகளிர் திட்டத்தின் கீழ் சுயஉதவி குழு அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது.
மேலும், திறன் பயிற்சி மேற்கொள்வதற்கான பதிவுகள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாகவும், அயல்நாட்டு வேலைக்கான பதிவுகள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாகவும், தொழிற் பழகுநர் பயிற்சிக்காக பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் பயிற்சி பிரிவின் வாயிலாகவும் மேற்கொள்வதற்கு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.