தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நேரில் ஆஜராக விலக்கு: திமுக எம்எல்ஏவுக்கு நீதிபதி மறுப்பு - திமுக

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்எல்ஏ மா. சுப்பிரமணியன் நேரில் ஆஜராக (முன்னிலையாக) வேண்டுமென்ற உத்தரவுக்கு விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

mla
mla

By

Published : Oct 12, 2020, 6:57 PM IST

கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே. கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட சிட்கோ நிலத்தை, சைதாப்பேட்டை தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்பிரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்ததாக பார்த்திபன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மா. சுப்பிரமணியன் மீது சிபிசிஐடி காவல் துறையினர், பல்வேறு சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தனர்.

இந்நிலையில், மா. சுப்பிரமணியன் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால், சிறப்பு நீதிமன்றத்தில் அவ்வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், வரும் 15ஆம் தேதி மா. சுப்பிரமணியன் நேரில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மா. சுப்பிரமணியன் தாக்கல்செய்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் வில்சன், மா. சுப்பிரமணியன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டுமென வாதிட்டார்.

மத்திய குற்றப்பிரிவு காவல் துறை சார்பில் முன்னிலையான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், மனு மீதான நகல் இதுவரை தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும், அதற்குள்ளாகவே தங்கள் தரப்பு வாதங்களை மனுதாரர் சமர்ப்பிப்பது ஏற்புடையதல்ல என்பதால், இவ்வழக்கில் காவல் துறை சார்பில் பதில் மனு தாக்கல்செய்ய அவகாசம் வேண்டுமெனவும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மா. சுப்பிரமணியன் சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலையாவதிலிருந்து விலக்களிக்க மறுத்து, அது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும், வழக்கில் காவல் துறை பதில் மனு தாக்கல்செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 18ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள்: தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details